மதுரை சோழவந்தான் அருகேயுள்ள அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் சுமார் 2 டன்னுக்கு மேல் நெல் குவியல்கள் தேக்கி வைக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகேயுள்ள முள்ளிப்பள்ளம் கிராமத்தில் 500 ஏக்கருக்கு மேற்பட்ட நிலத்தில் நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அங்குள்ள அரசு நெல் கொள்முதல் நிலையத்தில், நெல் கொள்முதல் செய்வதை அதிகாரிகள் முன்னறிவிப்பின்றி நிறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்கனவே அறுவடை செய்யப்பட்ட சுமார் 2 டன்னுக்கும் மேலான நெல் குவியல் குவியலாகத் தேங்கிக் கிடக்கிறது.
எனவே மேற்கொண்டு நெல் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். ஏக்கருக்கு 20 முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து நெல் நடவு மற்றும் அறுவடை பணிகள் மேற்கொண்டுள்ள நிலையில், அறுவடை செய்யப்பட்ட நெல் கொள்முதல் செய்யப்படாமல் கிடப்பதால் பெரும் நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் அரசும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.