மத்தியப்பிரதேச மாநிலத்தில் 13 பேருடன் சென்ற வேன் இருசக்கர வாகனத்தில் மோதி அருகிலுள்ள கிணற்றில் கவிழ்ந்ததில் 11 பேர் உயிரிழந்தனர்.
ரட்லம் நகரைச் சேர்ந்த கீர் என்பவர் தனது குடும்பத்தினர் 12 பேருடன், ஆந்த்ரி மாதா ஜி கோயிலுக்கு வேனில் சென்றுகொண்டிருந்தார். மந்த்சௌர் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த வேன், எதிரே வந்துகொண்டிருந்த கோபர் சிங் என்பவரது இருசக்கர வாகனத்தில் மோதி அருகிலிருந்த கிணற்றுக்குள் கவிழ்ந்தது.
இதில் வேனில் இருந்த 9 பேர், இருசக்கர வாகன ஓட்டி கோபர் சிங் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த மனோகர் சிங் என்பவர் கிணற்றுக்குள் இறங்கி விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற முயன்றார். ஆனால் துரதிருஷ்டவசமாக அவரும் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் உயிரிழந்த 11 பேரின் உடல்களையும் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, மத்தியப்பிரதேசத்தில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்குப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும், விபத்தில் காயமடைந்தவர்களின் மருத்துவச் சிகிச்சைக்காக தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இதேபோல, மத்தியப்பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவும் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.