சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்ட உத்தரவைச் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2006 முதல் 2010 வரையிலான காலக்கட்டத்தில் அமைச்சராகப் பதவி வகித்தபோது வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக ஐ.பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
தொடர்ந்து இந்த வழக்கில் இருந்து குற்றஞ்சாட்டப்பட்ட 4 பேரையும் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி லஞ்ச ஒழிப்பு காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு மேல்முறையீடு செய்தது.
இதன் வழக்கு விசாரணையின்போது லஞ்ச ஒழிப்பு காவல்துறை தரப்பில் முதல் தகவல் அறிக்கை மற்றும் குற்றப்பத்திரிக்கை நகல்கள் குறித்து விளக்கி வாதிடப்பட்டது.
மேலும் விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்த உத்தரவை ரத்து செய்து, ஆறு மாதத்தில் வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும் என ஆணையிட்டார்.