சிவகங்கை அருகே திமுக பிரமுகர் கொலையில் தொடர்புடையவர்களுக்கு ஆதரவாக மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இறந்தவரின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை அருகே உள்ள சாமியார்பட்டியில் திமுக நிர்வாகி பிரவீன் குமார் 3 பேர் கொண்ட கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் அதே கிராமத்தை சேர்ந்த கருணாகரன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கைது செய்யப்பட்டவருக்கு ஆதரவாக உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு சிலர் கொலை மிரட்டல் விடுப்பதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பிரவீன் குமாரின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமான தஞ்சாவூர் – மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மறியல் போராட்டத்தை கைவிட்டு பிரவீன் குமாரின் உறவினர்கள் கலைந்து சென்றனர்.