மதுரை கே.கே.நகர் பகுதியில் தனியார் மழலையர் பள்ளியின் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கே.கே.நகர் பகுதியில் செயல்பட்டு வந்த ஸ்ரீ கிண்டர் கார்டன் மழலையர் பள்ளியில் பயின்று வந்த 4 வயது குழந்தை ஆருத்ரா அங்கிருந்த தண்ணீர் தொட்டி அருகே விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது திறந்த நிலையில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் குழந்தை ஆருத்ரா தவறி விழுந்து உயிருக்கு போராடியது.
இதனைக்கண்ட அங்கிருந்தவர்கள் குழந்தையை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தினர் இருப்பினும் ஆருத்ரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இந்த சம்பவத்திற்கு பள்ளி நிர்வாகத்தின் கவனக்குறைவே காரணம் என தெரிவித்த பெற்றோர் காவல்நிலையத்தில் புகாரளித்தனர்.
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பள்ளியின் தாளாளர் மற்றும் ஆசிரியர் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். இதையடுத்து அங்கு ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் பள்ளிக்கு சீல் வைத்தனர்.