அமெரிக்காவின் வர்த்தகப் போர் மிரட்டலுக்கு மத்தியில், கனடா நாட்டில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மார்க் கார்னி தலைமையில் தேர்தலைச் சந்தித்த ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. கனடாவின் பிரதமராக மார்க் கார்னி வெற்றி இந்தியா கனடா உறவில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும் ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த 2015ம் ஆண்டு முதல் கனடாவின் பிரதமராக இருந்து வந்த ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிராக ஆட்சியிலும் கட்சியிலும் எதிர்ப்பு கிளம்பியது. Fyptmfகடந்த ஜனவரி மாதம் தனது பதவியை ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்தார்.
இதனையடுத்து, லிபரல் கட்சியின் தலைவராகவும், கனடாவின் புதிய பிரதமராகவும் மார்க் கார்னி கடந்த மார்ச் மாதம் 14 ஆம் தேதி பதவியேற்றார். வரும் அக்டோபர் வரை பதவி காலம் இருந்த நிலையில், பதவியேற்ற 10 நாட்களில் நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டுத் தேர்தலை அறிவித்தார்.
கடந்த ஏப்ரல் 28ம் தேதி, கனடாவில் தேர்தல் நடந்தது. லிபரல் கட்சி சார்பில் மார்க் கார்னியும் , கன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் பெர்ரி பொய்லிவ்வும் பிரதமர் வேட்பாளராகவும் களம் கண்டனர்.
343 உறுப்பினர்கள் கொண்ட கனடா நாடாளுமன்றத்தில், 167 இடங்களில் லிபரல் கட்சியும்,145 இடங்களில் கன்சர்வேட்டிவ் கட்சியும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2023ம் ஆண்டு செப்டம்பரில், காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்குத் தொடர்புள்ளது என்று அப்போதைய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டியதிலிருந்து இருநாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் விழத் தொடங்கியது. இருநாடுகளில் இருந்தும் தூதர்கள் வெளியேற்றப் பட்டனர். இருதரப்பு வர்த்தக உறவுகள் முடக்கின. கனடாவுக்கு விசா வழங்குவதையும் இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.
இதனைத் தொடர்ந்து, கனடாவில் இந்துக்கள் மீதும் இந்துக் கோயில்கள் மீதும் பல்வேறு வன்முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. காலிஸ்தான் பயங்கர வாதிகளுக்கான அரசாகவே ஜஸ்டின் ட்ரூடோவின் ஆட்சி இருந்தது.
இந்நிலையில், தேர்தலுக்கு முன்பே,மார்க் கார்னி, தனது பரபரப்பான தேர்தல் பிரச்சார நேரத்தில் ராம நவமியைக் கனடா வாழ் இந்துக்களுடன் கொண்டாடினார். இந்தியாவுடனான உறவை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்புகளைத் தேடுவதாகப் பல சந்தர்ப்பங்களில் மார்க் கார்னி குறிப்பிட்டிருக்கிறார்.
நாட்டில் நிலவும் நெருக்கடிகள் நீங்க கார்னி நிச்சயம் வழி செய்வார் என்ற மக்களின் நம்பிக்கையே கார்னிக்கு மீண்டும் பிரதமர் பதவியைப் பெற்றுத் தந்துள்ளது.
கனடாவை அமெரிக்காவின் 51-வது மாநிலமாக மாற்றுவேன் என மிரட்டுவதும், கனடா மீது அதிக வரி விதிப்பதும், போதைப்பொருட்களைக் கனடா ஏற்றுமதி செய்கிறது என்று சொல்வதும் எனத் தொடர்ந்து கனடாவை ட்ரம்ப் விமர்சனம் செய்து வருவது கனடா மக்களுக்குப் பிடிக்கவில்லை.
ட்ரம்ப்பைக் கடுமையாக எதிர்த்து நிற்கிறார் கார்னி. அதனால், ட்ரம்புக்கு ஏற்ற ஆள் ‘கார்னி’ தான் என்று கனடா மக்கள் முடிவெடுள்ளனர். லிபரல் கட்சியின் வெற்றியைத் தொடர்ந்து, அமெரிக்காவுடனான பழைய உறவு முறிந்து விட்டது என்றும், அமெரிக்கா செய்த துரோகத்தின் அதிர்ச்சியில் மீண்டு விட்டோம் என்றும், ட்ரம்பின் வர்த்தகப் போரில் வெற்றி பெறுவோம் என்றும் கார்னி கூறியிருக்கிறார்.
அதேபோல் எதிர்க்கட்சி தலைவர் பியர் பொய்லிவ்ரேவும் நாட்டின் நலனுக்காகவும், ட்ரம்பின் புதிய வரி விதிப்புக்கு எதிராகவும், கன்சர்வேட்டிவ் கட்சி, பிரதமருடன் சேர்ந்து பணி புரியும் என்று உறுதியளித்திருக்கிறார். மொத்தத்தில் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இருவரும் ட்ரம்ப்பை எதிர்ப்பதில் குறியாக உள்ளனர்.
தேர்தல் வெற்றி பெற்று பிரதமர் ஆகி இருக்கும் மார்க் கார்னிக்கு , ட்ரம்பை கையாள்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்று தெரியும். புதிய நண்பர்கள் மற்றும் புதிய வர்த்தக கூட்டாளிகளின் தேவையை அடிக்கடி அடிக்கோடிட்டுக் காட்டிவரும் மார்க் கார்னி, இந்தியாவுடனான உறவை மீண்டும் கட்டியெழுப்ப வாய்ப்புகள் உள்ளன என்று கடந்த மார்ச் மாதமே கூறியிருந்தார்.
கூடுதலாக, பயங்கர வாத அமைப்பான காலிஸ்தான் ஆதரவுத் தலைவர் ஜக்மீத் சிங்கின் தேசிய ஜனநாயகக் கட்சியின் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளது. தோல்வி காரணமாக NDP தலைவர் பதவியில் ஜக்மீத் சிங் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்தச் சூழலில், ட்ரம்பை எதிர்க்க இந்தியாவின் ஆதரவு மார்க் கார்னிக்குத் தேவைப்படுகிறது.
கனடா விற்பனைக்கு அல்ல என்று தெளிவாகக் கூறும் மார்க் கார்னி, நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் முழு கவனம் செலுத்தும் வகையில் இந்தியாவுடன் நல்லுறவைப் பேணுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.