ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மிக இளம்வயதில் குறைந்த பந்துகளில் சதமடித்து அசத்தியுள்ள வைபவ் சூர்யவன்சி, ஒரே நாளில் கிரிக்கெட் உலகின் வருங்கால சூப்பர் ஸ்டாராக உருவெடுத்துள்ளார். அவரது சாதனை பயணம் பற்றிப் பார்க்கலாம்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் திங்கள்கிழமை நடந்த 47வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. இதில் ஐபிஎல் தொடரிலேயே மிக இளம் வீரராகக் களமிறங்கிய 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்சி, வெறும் 35 பந்துகளில் சதம் விளாசி அதிரடி காட்டிய சம்பவம் தற்போது கிரிக்கெட் உலகில் ஹாட் டாப்பிக் ஆகியுள்ளது.
நடப்பாண்டிற்கான மெகா ஏலத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ரூபாய் 1 கோடியே 10 லட்சத்திற்கு வாங்கப்பட்டார் வைபவ். பீஹார் மாநிலத்தை சேர்ந்த இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு பிறந்தவர். ஐபிஎல் தொடர் வந்த பிறகு பிறந்த வைபவ்-ஐ ராஜஸ்தான் அணி ஏலத்தில் எடுத்த போது, ஐபிஎல் களமே பரபரப்பானது.
இந்த நிலையில் தான் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் காயம் காரணமாக விளையாடாத போது, லக்னோ அணிக்கு எதிராக ஓபனிங் இறங்கினார் வைபவ். தான் சந்தித்த முதல் பந்தையே சிக்ஸருக்கு விளாசிய வைபவ், அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
குறிப்பாக அந்த போட்டியில் 34 ரன்கள் விளாசிய வைபவ், அன்றைய தினமே தான் ஒரு சிறுவன் அல்ல என தனது பேட்டிங் திறன் மூலம் வார்னிங் கொடுத்தார். RCB உடனான அடுத்த போட்டியில் 16 ரன்கள் மட்டுமே அடித்து வெளியேறிய வைபவ், நேற்று நடைபெற்ற குஜராத் அணியுடனான போட்டியில் பட்டையைக் கிளப்பினார்.
தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய சூர்யவன்சி, 17 பந்துகளில் அதிவேக அரைசதம் விளாசியதோடு, வெறும் 35 பந்துகளில் சதமாக அதனை விளாசி அசத்தினார். இதன் மூலம் டி20 வரலாற்றிலேயே குறைந்த பந்துகளில், குறைந்த வயதில் சதம் அடித்த வீரர் என்ற பெருமையையும், ஐபிஎல் தொடரில் 2 வது அதிவேக சதம் விளாசி வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
வைபவ் சூர்யவன்சிக்கு உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது. 2021ம் ஆண்டு தனது வீட்டு மொட்டை மாடியில் பயிற்சி செய்து வந்த அவரது வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வைபவ் சூர்யவன்சி சேப்பாக்கம் கண்டெடுத்த ஒரு முத்து ஆவார். ஆம், பீகார் மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும், U19 கிரிக்கெட் தொடரில் சேப்பாக்கம் MA சிதம்பரம் மைதானத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராகக் களம் கண்ட வைபவ், 56 பந்துகளில் சதம் விளாசிய நிலையில், அவரது திறனைக் கண்ட ராஜஸ்தான் அணி நிர்வாகம் அவரை மெகா ஏலத்தில் கொத்தாகத் தூக்கியது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அதிரடி காட்டிய வைபவ் மீது நம்பிக்கை வைத்து, அவரை ஏலத்தில் வாங்கியுள்ள ராஜஸ்தான் அணியின் தலைமை செயல் அதிகாரி (CEO) ஜேக் லஷ் மெக்ரம், வைபவ் குறித்து ஏற்கனவே, “அவர் ஒரு அபாரமான திறமைசாலி, அதீத தன்னம்பிக்கை இருந்தால் மட்டும் தான் ஐபிஎல் வரை முன்னேறி வர முடியும். அவரைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தி, திறமையை வளர்த்தெடுப்பதற்கு வரும் மாதங்களில் நிறைய வேலைகள் எங்களுக்கு இருக்கும்” எனப் பேசியிருந்தார்.
தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நம்பிக்கையை வைபவ் பொறுப்புடன் நிறைவேற்றி உள்ளார். இனி வரும் போட்டிகளிலும், இந்திய அணிக்காக வருங்கால இடங்களிலும் வைபவ் சூர்யவன்சிக்கான இடம் நிரந்தரமே என்கிறது கிரிக்கெட் வட்டாரம்.