காஞ்சி சங்கர மடத்தின் புதிய இளைய மடாதிபதிக்கு சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் என பெயர் சூட்டப்பட்டது.
காஞ்சிபுரத்தை தலைமை இடமாக கொண்டு செயல்படும் சங்கர மடம் இந்து மதத்தை பரப்பி கல்வி பணிகளில் ஈடுபட்டு வருகிறது. காஞ்சி சங்கர மடத்தின் 70வது மடாதிபதியாக விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இருந்து வரும் நிலையில், காஞ்சி சங்கரமட பக்தர்களின் வேண்டுதலின்படி 71வது மடாதிபதி தேர்வு செய்யப்பட்டார்.
இவருக்கு அட்சய திருதியை தினத்தில் சந்நியாஸ்ரம தீட்சை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அவருக்கு, காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் திருக்குளத்தில் காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் சந்நியாஸ்ரம தீட்சையை விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழங்கினார்.
பின்னர், இருவரும் இணைந்து மூலவர் காமாட்சி அம்பிகையை தரிசித்தனர். அப்போது, காஞ்சி சங்கர மடத்தின் புதிய இளைய மடாதிபதிக்கு சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் என விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பெயர் சூட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், துக்ளக் ஆசிரியர் எஸ். குருமூர்த்தி, டாக்டர் சுதா சேஷய்யன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து, பீடாதிபதிகள் இருவரும் காமாட்சி அம்மன் கோயிலில் இருந்து சங்கர மடத்திற்கு மங்கல மேல வாத்தியங்களுடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். அங்கு இளைய மடாதிபதிக்கு உபதேசம் செய்யப்பட்டு 71வது மடாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். விழாவை முன்னிட்டு காமாட்சி அம்மன் கோயில் வளாகமும, சங்கர மடமும் வண்ண மின் விளக்குகளாலும், வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.