நெல்லையப்பர் கோயிலில் “தக் லைப்” பட பாடலுக்கு ரீல்ஸ் செய்து வீடியோ வெளியிட்ட ஜோடி மீது காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.
நெல்லையில் உள்ள புகழ்பெற்ற நெல்லையப்பர் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில், கோயிலுக்கு வந்த 2 இளம்பெண்கள் “தக் லைப்” பட பாடலுக்கு ரீல்ஸ் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.
இந்த வீடியோ வைரலான நிலையில், கோயிலுக்குள் வீடியோ எடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோயிலின் செயல் அலுவலர் சிவமணி, சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் மனு அளித்தார். அதில், புனிதமான நெல்லையப்பர் கோயிலில் இதுபோன்ற அநாகரிகமான செயல்களில் ஈடுபடக் கூடாதென தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கோயிலில் அமலில் உள்ள நடைமுறைகளை பக்தர்கள் பின்பற்ற வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, நெல்லையப்பர் கோயிலில் ரீல்ஸ் வெளியிட்ட சிறுமிகள் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில், இனி மக்களுக்கு தொந்தரவு தரும்படியாக வீடியோ எடுக்க மாட்டோம் என்றும், காவல்துறைக்கு விளக்கமளிக்க தயாராக இருப்பதாகவும் சிறுமிகள் தெரிவித்துள்ளனர்.