திண்டுக்கல் மாவட்டம் சின்னூர் மலைக் கிராமத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட நபரைப் பொதுமக்கள் டோலி கட்டி தூக்கிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சின்னூர் காலனி, பெரியூர் உள்ளிட்ட மலை கிராம மக்கள், அடிப்படைத் தேவைகளுக்குப் பெரியகுளம் வழியாக நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
3 ஆறுகளைக் கடந்து முக்கிய தேவைகளுக்குச் செல்லும் மக்கள், சாலை, தெரு விளக்குகள், பேருந்துகள் என அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சின்னூர் பகுதியைச் சேர்ந்த நாகராசு என்பவர் அவசர தேவைக்காக வனப்பகுதி வழியாகச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு அவர் மயக்கமடைந்தார். இதைக் கண்ட அங்கிருந்தவர்கள், நாகராசுவை டோலி கட்டி தூக்கிச் சென்றனர்.
10 கிலோமீட்டர் தொலைவிற்கு 5 மணி நேரமாக டோலி மூலம் அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு, உடல்நிலை மோசமானதால் தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.