அமெரிக்க எல்லையில், பெற்றோரின் தொடர்பு விவரங்கள் எழுதப்பட்ட துண்டுச் சீட்டுடன், கைவிடப்பட்ட இந்தியக் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. என்ன நடக்கிறது அமெரிக்க எல்லையில்? சட்டவிரோதமாகக் குழந்தைகள் அமெரிக்காவுக்குச் செல்ல முயற்சிப்பது ஏன் ? யார் அனுப்புகிறார்கள் ? என்பது பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
2019 ஆம் ஆண்டு , அமெரிக்கா மெக்சிகோ எல்லையில், தன் தாயிடமிருந்து பிரிக்கப் பட்டு விடுவோமோ என்ற அச்சத்துடன் தாயின் முழங்காலைப் பற்றிக் கொண்டு அழும் சிறுமியின் புகைப்படம், அப்போதைய அதிபர் ட்ரம்பின் எல்லைக் கொள்கையை மாற்றி எழுத வைத்தது.
அதேபோல், இப்போதும் நிறைய இந்தியக் குழந்தைகள் தனியாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சிக்கும் அதிர்ச்சியூட்டும் போக்கு உருவாகியுள்ளது.
கடந்த அக்டோபர் முதல் இந்த ஆண்டு பிப்ரவரி வரை, பெற்றோரோ,பாதுகாவலரோ இல்லாத 77 இந்திய குழந்தைகள் அமெரிக்க எல்லைகளில் கைது செய்யப் பட்டுள்ளனர். இந்த 77 குழந்தைகளில் 53 பேர் மெக்சிகோ தெற்கு நில எல்லையில் கைது செய்யப்பட்டதாகவும், 22 பேர் கனடாவிலிருந்து அமெரிக்க எல்லைக்குள் நுழையும் போது பிடிபட்டதாகவும் அமெரிக்கச் சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெரும்பாலும் பெரியவர்களுடன் தான் குழந்தைகள் அனுப்பி வைக்கப் படுகிறார்கள் என்றும், ஆனால் எல்லை பாதுகாப்பு அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்படுவதற்காகவே, சோதனைச் சாவடிகளுக்கு அருகில் கைவிடப்படுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. பெற்றோரின் தொடர்பு விவரங்கள் எழுதப்பட்ட துண்டுச் சீட்டுடன், அமெரிக்க எல்லையில் கைவிடப்பட்ட நிலையில் பிடிபடுகிறார்கள். இப்படி குழந்தைகள் எல்லை தாண்டுவதற்குப் பின்னால், ஒரு திட்டம் இருப்பதாகக் கூறப் படுகிறது.
முதலில் குழந்தைகள் அமெரிக்காவில் அகதி அந்தஸ்து பெற்றப் பின், அதனடிப்படையில், தாங்களும் அமெரிக்காவில் குடியேறலாம் என்று பெற்றோர்கள் திட்டமிடுகிறார்கள். குழந்தைகளைப் பயன்படுத்தி அமெரிக்கக் குடியுரிமையான GREEN CARD பெறுவதற்கான ஒரு வழியாகப் பார்க்கப் படுகிறது.
அமெரிக்காவின் மனிதாபிமான சட்டங்களைப் பயன்படுத்தி அகதி அந்தஸ்தும்,பிறகு நிரந்தர குடியுரிமையும் பெறலாம் என்ற நம்பிக்கையில், குழந்தைகளை அமெரிக்க எல்லையில் கைவிடுகிறார்கள்.
இதற்குப் பின்னால் ஒரு பெரிய நெட்வொர்க்கே உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இந்தியாவின் குஜராத்திலிருந்து படேல் சமூகத்தைச் சேர்ந்த குடும்பங்களே இந்த ஆபத்தான முயற்சியில் ஈடுபடுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, குஜராத்தின் ஜூலாசன், மொகாசன், நர்திபூர், டிங்குச்சா, வாடு மற்றும் கையால் போன்ற கிராமத்திலிருந்து குழந்தைகள் அதிக அளவில் அமெரிக்காவுக்கு அனுப்பப்படுகிறார்கள்.
Human Smuggling Network என்ற மனித கடத்தல் கும்பலின் உதவியுடன் தங்கள் குழந்தைகளை மெக்சிகோ அல்லது கனடா வழியாக அமெரிக்க எல்லைக்கு அனுப்பப்படுவதைப் பல குஜராத்தி குடும்பங்கள் ஒப்புக்கொண்டுள்ளன.
தாகத்துக்குத் தண்ணீர், பசிக்கு உணவு கூட இல்லாமல் காடுகள்,மலைகள்,பாலைவனப் பகுதிகளைக் கடந்து செல்லும் இந்த பயணம் மிகவும் ஆபத்தானது. இது தெரிந்தே குஜராத் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைத் தனியாக அனுப்புகிறார்கள்.
இதற்கிடையில், சட்ட விரோத குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறார் ட்ரம்ப். சட்ட விரோதமாகக் குடியேறியவர்கள் தங்கள் சட்டப் பூர்வ ஆவணங்களை எப்போதும் கையோடு எடுத்துச் செல்லவேண்டும் என்ற ட்ரம்பின் உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.
மேலும், 6000க்கும் மேற்பட்ட குடியேறியவர்களை இறந்தவர்கள் என்று பட்டியலிட்டு அவர்களின் சமூகப் பாதுகாப்பு எண்ணையும் ரத்து செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது சட்ட விரோதமாகக் குடியேறியவர்கள் தானாக வெளியேற வற்புறுத்தும் நடவடிக்கை என்று கூறப்படுகிறது.
அமெரிக்க எல்லையில் பிடிபட்ட இந்தியக் குழந்தைகளை, அகதி முகாமில் தங்க வைத்து, சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். சட்ட நடவடிக்கைகளில் சாதகமான நல்ல முடிவு வராமலும் போகலாம் என்பதால்,அந்த குழந்தைகளின் எதிர்காலம் நிச்சயமற்றதாகவே உள்ளது.