அரசு அனுமதியின்றி ஃபவுண்டேசன் தொடங்கிய விவகாரத்தில் சேலம் பெரியார் பல்கலைக் கழக துணைவேந்தரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் அரசின் முன் அனுமதியின்றி பூட்டர் ஃபவுண்டேசன் என்ற நிறுவனத்தைத் தொடங்கியதாகத் துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல் உள்ளிட்ட 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டதை அடுத்து துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டார்.
உடனடியாக அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதோடு வழக்கு விசாரணைக்கும் தடையும் விதிக்கப்பட்டது. இந்நிலையில் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், கடந்த வாரம் சூரமங்கலம் போலீசார் முன்பு ஆஜராகி ஜெகநாதன் விளக்கமளித்தார்.
அவரிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஜெகநாதன் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர்.