கும்பகோணத்தில் ஆன்மீக சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி, பாபநாசம் இரட்டைப் பிள்ளையார் கோயில், சீனிவாச பெருமாள் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் சுற்றியுள்ள பல்வேறு கோயில்களுக்கு செல்ல வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி பாபநாசம் வந்தடைந்தார். ஹெலிகாப்டரில் வந்த அவருக்கு பாஜக மற்றும் இந்து அமைப்பினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர், பாபநாசத்தில் உள்ள இரட்டைப் பிள்ளையார் கோயில் மற்றும் சீனிவாச பெருமாள் கோயிலில் அவர் சாமி தரிசனம் செய்தார். இதனை தொடர்ந்து, கும்பகோணம் மூர்த்தி கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றினார்.
அப்போது பேசிய அவர், மன அழுத்தத்தை போக்கும் ஒரே வழி தியானம் என குறிப்பிட்டார். நாட்டில் தீவிரவாதம் ஒழிந்து மக்கள் அமைதியுடன் வாழ வேண்டும் எனவும் கூறினார். இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.