புகாரளிக்கக் காவல் நிலையத்திற்குச் செல்லும் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டியது அவரது அடிப்படை உரிமை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீவில்லிப்புத்தூர் காவல்நிலையத்துக்குப் பண மோசடி தொடர்பாகப் புகாரளிக்கச் சென்றபோது காவல் ஆய்வாளர் அநாகரீகமாக நடந்து கொண்டதாக தமிழ்செல்வன் என்பவர் மாநில மனிம உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதனை விசாரித்த மாநில மனித உரிமைகள் ஆணையம், பாதிக்கப்பட்டவருக்குக் காவல் ஆய்வாளர் பவுல் ஏசுதாசன் 2 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
இதனையடுத்து அபராத தொகையை ரத்து செய்யக் கோரி பவுல் ஏசுதாசன் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு புதன்கிழமையன்று விசாரணைக்கு வந்த நிலையில், பொய் புகாரின் அடிப்படையில் தனக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை ரத்து செய்ய வேண்டும் எனக் காவல் ஆய்வாளர் தரப்பில் கோரப்பட்டது.
அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், புகாரளிக்கக் காவல் நிலையத்திற்குச் செல்லும் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் எனவும், அது அவரது அடிப்படை உரிமை எனவும் தெரிவித்தனர்.
மேலும், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் விதித்த 2 லட்ச ரூபாய் அபராதத்தையும் உறுதி செய்து மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.