தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக் காலத்தை நீட்டித்ததை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், நடிகர் சங்க தலைவர் உள்ளிட்டோர் பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 8-ம் தேதி நடைபெற்ற நடிகர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தின்போது, நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறி, நிர்வாகிகளின் பதவிக்காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தைச் செல்லாது என அறிவிக்கக் கோரி, நடிகர் சங்க உறுப்பினர் நம்பிராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது, நடிகர் சங்க கட்டடப் பணிகளைச் சுட்டிக்காட்டி பதவிக் காலத்தை நீட்டிக்க முடியாது என்றும்,
புதிய நிர்வாகிகள் கட்டுமான பணிகளைத் தொடர்வார்கள் எனவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பதவிக் காலத்தை நீட்டித்தது சங்கத்தின் சட்டதிட்டங்களுக்கும், தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டத்திற்கும் விரோதமானது எனவும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
இதனைக் கேட்ட உயர்நீதிமன்றம், வழக்கு தொடர்பாகத் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி ஆகியோர் ஜூன் 4-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளிவைத்தது.