பாலியல் வன்கொடுமை செய்த சிறுமியைத் திருமணம் செய்து கொண்டதால் மட்டும் போக்சோ வழக்கை ரத்து செய்ய முடியாது எனச் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உதகையைச் சேர்ந்த சிறுமி ஒருவர் காணாமல் போனதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், விஜயகுமார் என்பவர் மீது கடத்தல் மற்றும் போக்சோ பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த உதகை மகளிர் சிறப்பு நீதிமன்றம், இருவரும் திருமணம் செய்து கொண்டதால் போக்சோ வழக்கிலிருந்து விஜயகுமாரை விடுதலை செய்த நிலையில், கடத்தல் வழக்கில் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்தது.
இதனை எதிர்த்து விஜயகுமார் மற்றும் காவல்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், வெளியூரில் தங்கியபோது சிறுமியை வன்கொடுமை செய்த விஜயகுமார், பின்னர் போக்சோ வழக்கிலிருந்து தப்பிப்பதற்காகவே திருமணம் செய்து கொண்டதாகத் தெரிவித்தது.
மேலும், திருமணம் செய்து கொண்டதால் வழக்கை ரத்து செய்தால் போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்ட நோக்கம் தோற்கடிக்கப்பட்டுவிடும் எனவும் உயர்நீதிமன்றம் கூறியது.
ஆகையால், விஜயகுமாருக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்த உயர்நீதிமன்றம், போக்சோ வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது.