அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் மீதான வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றுவது தேவையற்றது எனத் தமிழக டிஜிபி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
ஞானசேகரன் மீதான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி பாஜக வழக்கறிஞர் மோகன்தாஸ், மனுத் தாக்கல் செய்த நிலையில், ஞானசேகரன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு விவரங்களைத் தாக்கல் செய்ய காவல்துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கானது மீண்டும் விசாரணைக்கு வந்ததையடுத்து, தமிழக டிஜிபி தரப்பில் 17 பக்க அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ஞானசேகரன் மீது சென்னை, செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும், அதில் 5 வழக்குகளில் ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் மொத்தம் 18 சாட்சிகள் சேர்க்கப்பட்டு, பாதிக்கப்பட்ட மாணவி உட்பட 13 பேரிடம் நீதிமன்றம் விசாரணை நடத்தியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞானசேகரன் மீதான அனைத்து வழக்குகளிலும் காவல்துறை விசாரணையை நிறைவு செய்துள்ளதால், சிபிஐ விசாரணை தேவையற்றது எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.