திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரப் பகுதியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 20க்கும் மேற்பட்டோர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
செங்கம் நகரப் பகுதியில் செயல்பட்டு வரும் சார் பதிவாளர் அலுவலகத்திற்குக் கடந்த வாரம் நடைபெற்ற திருமணத்தைப் பதிவு செய்வதற்காகப் பெண் வீட்டார் மற்றும் மாப்பிள்ளை வீட்டார் ஆகியோர் ராஜ வீதியில் உள்ள தனியார் கணினி மையத்தில் ஆவணம் தயார் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது மாப்பிள்ளை, பெண் வீட்டாரின் உறவினரை தரக்குறைவாகப் பேசி தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண் வீட்டாரின் உறவினர்கள் மாப்பிள்ளை மற்றும் அவரது வீட்டார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஒருகட்டத்தில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து செங்கம் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.