எவ்வித பாகுபாடும் இல்லாமல் அனைவருக்குமான திட்டங்களைப் பிரதமர் மோடி செயல்படுத்தி வருவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை ஆளுநர் மாளிகையில் குஜராத், மகாராஷ்டிரா மற்றும் இமாச்சலப்பிரதேச மாநிலங்களின் உதய தினவிழா கொண்டாடப்பட்டது.
இதில் 3 மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பாரம்பரிய உடையணிந்து கலந்துகொண்டனர். விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, 3 மாநில பிரதிநிதிகளைப் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்.
அதைத்தொடர்ந்து சிறப்புரையாற்றிய ஆளுநர் ரவி, நாட்டின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்த வேண்டும் என்பதே இந்த கொண்டாட்டத்தின் நோக்கம் எனத் தெரிவித்தார்.
ஒரு காலத்தில் 15 மாநிலங்களை மட்டுமே கொண்டிருந்த இந்தியா, தற்போது 28 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்களுடன் பரந்து விரிந்துள்ளது எனக் கூறிய ஆளுநர் ரவி, எவ்வித பாகுபாடும் இல்லாமல் அனைவருக்குமான திட்டங்களைப் பிரதமர் மோடி செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.