ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வசூல் 2 லட்சத்து 36 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வசூல் 2 லட்சத்து 36 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
கடந்தாண்டு ஏப்ரலில் 2 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த மொத்த ஜிஎஸ்டி வசூல், தற்போது 12 புள்ளி 6 சதவீதம் உயர்ந்துள்ளது.
அதேபோல் ஏப்ரல் மாதத்திற்கான நிகர ஜிஎஸ்டி வசூல் 2 லட்சத்து 9 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்தாண்டு ஏப்ரலுடன் ஒப்பிடுகையில் 9 புள்ளி ஒரு சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,
ஜிஎஸ்டி வசூல் எண்ணிக்கை, இந்தியப் பொருளாதாரத்தின் மீட்சித் திறனையும், கூட்டுறவு கூட்டாட்சியின் செயல்திறனையும் வெளிப்படுத்துவதாகவும் வரி செலுத்தும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி கட்டமைப்பில் உள்ள நம்பிக்கையே நாட்டு முன்னேற்றத்தின் ஊக்கமாக அமைவதாகவும் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் ஒருங்கிணைந்த அர்ப்பணிப்பை பிரதிபலிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஜிஎஸ்டி அமைப்பில் சமமாக பங்காற்றும் மாநில நிதி அமைச்சர்கள் மற்றும் மாநில ஜிஎஸ்டி அதிகாரிகளின் விடாமுயற்சிக்கு பாராட்டுகள் எனவும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.