முழுக்க முழுக்க சூரியசக்தி மின் உற்பத்தியின் மூலம் இயங்கும் கோவை மாநகர மாவட்ட பாஜக அலுவலகம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மற்ற அலுவலகங்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் கோவை மாநகர் பாஜக அலுவலகம் தொடர்பாகவும், அங்குப் பொருத்தப்பட்டுள்ள சோலார் பேனல் தொடர்பாகவும் இந்த செய்தித் தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
நாடு முழுவதும் உள்ள ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பது மட்டுமின்றி மின்சாரத்துறையில் இந்தியாவைத் தன்னிறைவு அடையச் செய்யும் நோக்கத்தில் பிரதமரின் சூர்யோதயா யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது.
இத்திட்டத்திற்கு மானியம் வழங்குவதோடு உபரி மின்சார உற்பத்திக்குக் கூடுதல் வருமானமும் கிடைக்கும் என்பதால் சூரிய ஒளி மின்சாரத்திட்டத்தை தேசிய இயக்கமாக மாற்ற வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் எண்ணம் நாடு முழுவதும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
பிரதமரின் எண்ணத்தையும், நோக்கத்தையும் வலுப்படுத்தும் வகையில் அண்மையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் திறந்து வைக்கப்பட்ட கோவை மாநகர் மாவட்ட பாஜக அலுவலகம் முழுவதும் சூரிய ஒளி மின்சாரத்தின் மூலமாகவே இயங்கி வருகிறது. 25 செண்ட் பரப்பளவில் மூன்று தளங்களைக் கொண்டிருக்கும் இந்த அலுவலகத்தில் பொருத்தப்பட்ட சோலார் பேனல்களின் மூலம் சுமார் 10 கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
சுமார் 7 லட்ச ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தில் அலுவலக பயன்பாட்டிற்குப் போக மீதமிருக்கும் மின்சாரத்தை மின்வாரியத்திற்கு விற்பனையும் செய்யப்படுகிறது.
பிரதமர் மோடியின் கனவை நினைவாக்கும் நோக்கத்தில் கோவை மாநகர, மாவட்ட பாஜக அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருக்கும் இந்த சோலார் பேனல்கள் மற்ற கட்சி அலுவலகங்களுக்கு முன்னோடியாகக் காட்சியளிக்கின்றன.
இதன்மூலம் நாட்டிலேயே ஒரு கட்சி அலுவலகம் முழுவதுமாக சோலார் மின்சாரத்தில் இயங்கும் பெருமையைக் கோவை மாநகர பாஜக மாவட்ட அலுவலகம் பெற்றிருக்கிறது. அடிக்கடி உயர்த்தப்படும் மின் கட்டணத்தை அறவே தவிர்க்கவும், சொந்தமாக மின் உற்பத்தியைச் செய்யவும் உதவக்கூடிய இந்த மத்திய அரசின் சோலார் பேனல் திட்டம் அனைத்து தரப்பு மக்களின் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.