பகல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின் இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர்ச் சூழல் உருவாகியுள்ளது. பயங்கரவாத பாகிஸ்தானுக்கு மேலும் பொருளாதார பேரழிவை ஏற்படுத்தும் அதிரடி நடவடிக்கைகளை இந்தியா தொடங்கி உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அது என்ன நடவடிக்கைகள் என்பது பற்றி ஒரு செய்தி தொகுப்பு.
2008ம் ஆண்டு நடந்த கொடூரமான மும்பை தாக்குதலுக்குப் பிறகு, பகல்காம் பயங்கரவாதத் தாக்குதல்தான் அதிக எண்ணிக்கையிலான பொதுமக்களைக் காவு வாங்கியிருக்கிறது.
பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, சிந்து நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை உடனடியாக நிறுத்திய இந்தியா,அட்டாரி எல்லையை மூடியது.
தூதரக உறவுகளைத் துண்டித்தது. நாட்டில் உள்ள பாகிஸ்தான் மக்களை வெளியேற்றியது. வர்த்தக உறவுகளை நிறுத்தியது. வான்வெளியுடன் கடல்வழியையும் பாகிஸ்தான் பயன்படுத்தத் தடை விதித்துள்ளது. பாகிஸ்தான் அஞ்சல் சேவைகளை நிறுத்தியது.
முப்படைகளுக்கும் பிரதமர் மோடி, முழு சுதந்திரம் அளித்துள்ள நிலையில், இந்தியா எப்போது பதிலடி கொடுக்குமோ எனத் தெரியாமல் பாகிஸ்தான் கடும் அச்சத்தில் உள்ளது. இந்நிலையில், பொருளாதார ரீதியாகவும் பாகிஸ்தான் மீது இரண்டு முக்கிய நடவடிக்கைகளை இந்தியா பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
முதலில், நிதி நடவடிக்கை பணிக்குழுவின் சாம்பல் பட்டியலில் பாகிஸ்தானை மீண்டும் சேர்ப்பது. தொடர்ந்து கருப்பு பட்டியலில் பாகிஸ்தானைச் சேர்ப்பது; இரண்டாவது, அந்நாட்டுக்கான சர்வதேச நிதி ஆணையத்தின் நிதியுதவிகளைத் தடுப்பது.
நிதி நடவடிக்கை பணிக்குழு (The Financial Action Task Force – FATF) என்பது, 1989ம் ஆண்டு, G7 நாடுகளால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவியை எதிர்ப்பதே இதன் முதன்மை நோக்கமாகும்.
பணமோசடி எதிர்ப்பு (AML) மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நிதியுதவி (CTF) கொள்கைகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கான சர்வதேச தரநிலைகள் மற்றும் சிறந்த நடைமுறைகளை FATF அமைக்கிறது. உலக அளவில் 200க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த நடைமுறைகளை செயல்படுத்தி வருகின்றன.
நிதி மோசடி மற்றும் பயங்கரவாதிகளுக்கு நிதிஉதவி ஆகிய குற்றங்களைச் செய்யும் நாடுகள் முதலில் சாம்பல் பட்டியலில் வைக்கப்படும். சாம்பல் பட்டியலில் இருந்தும் தொடர்ந்து விதிமுறைகளை மீறும் நாடுகள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படும்
2012 முதல் 2015 வரை சாம்பல் பட்டியலில் இருந்த பாகிஸ்தான், மீண்டும் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த குற்றத்துக்காக 2018ம் ஆண்டு மீண்டும் சாம்பல் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
FATF-ன் நிர்ப்பந்தம் காரணமாகவே, லக்க்ஷர்-இ-தொய்பா தலைவர் ஹபீஸ் சயீது உட்பட மும்பை தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்தது. அதன்பிறகு, FATF-ன் சாம்பல் பட்டியலில் இருந்து பாகிஸ்தான் நீக்கப்பட்டது. அப்போதே இந்தியா, பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் சேர்க்க வற்புறுத்தியது.
இப்போது பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குபின், பாகிஸ்தானைக் கருப்பு பட்டியலில் சேர்க்க இந்தியா FATFக்குக் கடுமையான அழுத்தம் கொடுத்து வருகிறது.
இதற்கிடையே, பாகிஸ்தானுக்குச் சர்வதேச நாணய நிதியம் வழங்க ஒப்புக்கொண்டுள்ள 7 பில்லியன் டாலர் உதவியைத் தடுப்பது என்ற நடவடிக்கையும் இந்தியா எடுக்கத் தொடங்கியுள்ளது.
கடந்த மார்ச் மாதம், பாகிஸ்தானுக்கான கடன் திட்டத்தை மறுபரிசீலனை செய்யப் பாகிஸ்தானுக்குச் சென்ற IMF குழுவிடம், இந்த ஜூலை மாதத்துக்குள் பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தை விற்பனை செய்வதாகச் சர்வதேச நாணய நிதியத்திடம் பாகிஸ்தான் உறுதியளித்தது.
மேலும், Zarai Taraqiati Bank Limited, First Women Bank Limited மற்றும் நாட்டின் ஒரே வீட்டுக்குக் கடன் விளங்கும் நிறுவனமான House Building Finance Company Limited ஆகிய முக்கிய மூன்று நிதி நிறுவனங்கள் மற்றும் பைசலாபாத், இஸ்லாமாபாத் மற்றும் குஜ்ரான்வாலா ஆகிய மூன்று மின் விநியோக நிறுவனங்கள் உட்பட ஏழு நிறுவனங்களையும் விற்று விடுவதாகவும் பாகிஸ்தான் அரசு உறுதி அளித்துள்ளது.
இந்நிலையில் தான், சர்வதேச நாணய நிதியத்திடம் கடன்வாங்கும் பாகிஸ்தான் அந்த நிதியைப் பயங்கரவாதத்துக்குப் பயன்படுத்துகிறது என்று இந்தியா குற்றம் சாட்டி வருகிறது.
இந்தச் சூழலில், சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயங்கரவாத அமைப்புகளை உருவாக்கி, ஆதரவளித்து, ஆயுதப் பயிற்சியளித்து, பயங்கரவாத குழுக்களுக்கு நிதியளித்து வந்ததாகப் பாகிஸ்தானின் இராணுவ அமைச்சர் கவாஜா ஆசீஃப், தொலைக்காட்சி நேர்காணலில், ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த வெளிப்படையான ஒப்புதல் வாக்குமூலத்தை ஐநா சபையில் சுட்டிக்காட்டிய இந்தியா, உலகம் இனி கண்மூடித்தனமாக இருக்க முடியாது என்று வலியுறுத்தி உள்ளது.
கருப்பு பட்டியலில் பாகிஸ்தானைச் சேர்க்க இந்தியா அழுத்தம் கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. அப்படி நடந்தால், பணவீக்கம் கட்டுக்கடங்காமல் போகும் மற்றும் பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடையும். பாகிஸ்தானிடம் வெளிநாட்டுக் கையிருப்பு இல்லாமல் போகும். நாட்டின் பொருளாதாரம் முற்றிலுமாக அழியும். ஈரான் உட்பட மற்ற நாடுகளுடனான ஒப்பந்தங்கள் முடிவுக்கு வரும். பாகிஸ்தானுடன் எந்த நிதி நிறுவனமும் ஒப்பந்தம் செய்யாது.
மொத்தத்தில் பாகிஸ்தான் பாலைவனமாகும். இதைத்தான், யாரும் கற்பனை செய்து பார்க்க முடியாத வகையில் பதிலடி இருக்கும் என்று பிரதமர் மோடி கூறியதாகத் தெரியவந்துள்ளது.