போலி சாதிச் சான்றிதழ்கள் வழங்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கத் தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போலி சாதி சான்றிதழ்கள் வழங்கி வேலைவாய்ப்பைப் பெற்றதாக அளிக்கப்பட்ட புகாரின் உண்மைத் தன்மை பற்றிய விசாரணையைக் குறித்த காலத்திற்குள் முடிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் போலி சாதி சான்றிதழ்கள் வழங்கும் வருவாய்த் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். பட்டியலின, பழங்குடியினர் சாதி சான்றிதழ்கள் வழங்கும் போது விதிகளைப் பின்பற்றாத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதேபோல் சாதி சான்றிதழ்களின் உண்மைத் தன்மை குறித்து விசாரிக்க போதுமான எண்ணிக்கையில் மாநில அளவிலான குழுக்களை அமைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் ஆணையிட்டனர்.
மேலும் முழுமையான விசாரணைக்கு பிறகே சாதிச்சான்றிதழ்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.