தகவல் மற்றும் தொழில்நுட்பத்தில் தமிழக காவல்துறை பின்தங்கி இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
வேலூரை சேர்ந்த மனோகர் தாஸ் என்பவர் கடந்த 2020-ம் ஆண்டு சென்னையை சேர்ந்த இருவர் மீது காவல் நிலையத்தில் மோசடி புகார் அளித்த நிலையில், இதுகுறித்து மேல் நடவடிக்கை எடுக்கப்படாததால், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
விசாரணையின்போது, 2 மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்வதாக உறுதியளித்த காவல்துறை, கூறியதுபோல எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், மனுதாரர் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றாத அதிகாரிகள் மீது சட்டப்படியும், துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
தகவல் மற்றும் தொழில்நுட்பத்தில் தமிழ்நாடு காவல்துறை பின்தங்கி இருப்பதாக குறிப்பிட்ட நீதிபதி, விசாரணை அமைப்புகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்குவதற்கான காலம் வந்துவிட்டதாக தெரிவித்தார்.