கோவாவில் கோயில் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு கோவாவில் உள்ள ஷிர்காவோ கிராமத்தில் தேவி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் திருவிழாவை ஒட்டி அங்கு ஏராளமான பக்தர்கள் குவிந்த நிலையில், கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்றது.
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்த நிலையில், 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்த முதலமைச்சர் பிரமோத் சாவந்த் ஆறுதல் கூறினார்.
இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை உள்ளூர் நிர்வாகம் செய்து வருவதாகவும் பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.