நாகை மாவட்ட மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்திய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.
தமிழக மீனவர்கள் மீது அவ்வப்போது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில், நாகை அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த ஆனந்த் என்பவருக்குச் சொந்தமான படகில் 5 பேர் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
கோடியக்கரை தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அதிவேகமாகப் படகில் வந்த 6 கடற்கொள்ளையர்கள், மீனவர்களைச் சரமாரியாகத் தாக்கிவிட்டு மீன்பிடி உபகரணங்களைத் திருடிச் சென்றனர்.
இதேபோல் மேலும் சில மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் காயமடைந்த 17 பேர் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் நிலையில், படுகாயம் அடைந்த மேலும் சில மீனவர்கள் கரைக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து அரசு தக்க நடவடிக்கை மேற்கொண்டு இழப்பீடு வழங்க வேண்டுமெனக் காயமடைந்த மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.