சைவ சித்தாந்தம் என்பது மதம் சார்ந்தது அல்ல, ஆன்மா சார்ந்தது என மத்திய அமைச்சரும், பாஜக தேசியத் தலைவருமான ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் உள்ள SRM கல்வி நிறுவன வளாகத்தில், 6-வது சர்வதேச சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது.
இதில் மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா, ஆளுநர் ஆர்.என்.ரவி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மூத்த தலைவர்கள் தமிழிசை சௌந்தரராஜன், ஹெச்.ராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதைத்தொடர்ந்து விழாவில் சிறப்புரையாற்றிய மத்திய அமைச்சரும், பாஜக தேசியத் தலைவருமான ஜெ.பி.நட்டா, வாழ்க தமிழ், வளர்க தமிழ்நாடு எனக்கூறி உரையைத் தொடங்கினார். தொடர்ந்து பேசிய அவர், தருமபுரம் ஆதீனம் மிகவும் தொன்மையானது எனத் தெரிவித்தார். கோயில்கள், புலவர்கள் என பல்வேறு சிறப்புகளைத் தமிழ்நாடு பெற்றிருப்பதாகவும் புகழாரம் சூட்டினார்.
இதையடுத்து தனது உரையைத் தொடங்கிய ஆளுநர் ரவி, சனாதன தர்மத்தால் தான் பாரதம் வாழ்ந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.
திருமுறை, தேவாரம் ஆகிய தலைசிறந்த படைப்புகளை சைவ சித்தாந்தம் வழங்கியுள்ளதாகக் கூறிய அவர், சைவ சித்தாந்தத்தைப் பிரதமர் மோடி பின்பற்றுவதாகத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், உயர்கல்வி பாடத்திட்டத்தில் தேவாரம், திருவாசகம் பாடல்களைச் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினார்
இதையடுத்து பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, வந்திருந்த அனைவரையும் தமிழ் மொழியில் வரவேற்றார். இதைத் தொடர்ந்து சிவபெருமானை அவர் தமிழில் போற்றி வணங்கியபோது கூடியிருந்தவர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.
இதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், ஆன்மிகம் என்பது மதம் சார்ந்தது அல்ல, மனம் சார்ந்தது எனத் தெரிவித்தார். சனாதானம் என்பது சடங்குகள் அல்ல, அது சமயத்தின் வாழ்வியல் முறை எனவும் அவர் கூறினார்.