இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில் தேர்வர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களைத் தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
2025-26-ம் கல்வியாண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாளை பிற்பகல் 2 மணி தொடங்கி மாலை 5.20 மணி வரை நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில் தேர்வர்கள் பின்பற்றவேண்டிய வழிகாட்டுதல்களைத் தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தேர்வு நாளன்று, தேர்வர்கள் ஏற்கனவே வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தேர்வு நேர அட்டவணையைப் பின்பற்ற வேண்டும் என்றும், சரியான நேரத்தில் தேர்வு மையத்துக்கு வருவது அவசியம் என்றும் அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஆண் தேர்வர்கள் பாதுகாப்பு மற்றும் சோதனை நடைமுறைகளுக்கு ஏற்ப எளிமையான, வசதியான ஆடைகளை அணிய வேண்டும் என்றும், தேவையற்ற தாமதங்கள், தகுதியிழப்புக்கு வழிவகுக்கும் ஆடை மற்றும் ஆபரணங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
ஆண் தேர்வர்கள், வெளிர் நிற அரைக்கை சட்டைகள், எளிமையான கால் சட்டைகள், மெல்லிய காலணிகளை அணிந்து வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், பெண் தேர்வர்கள் ஆபரணங்கள் மற்றும் அலங்காரங்கள் இல்லாமல் எளிய ஆடைகளை அணிந்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், விரிவான வடிவமைப்புகள் இல்லாத வெளிர் நிற அரைக்கை குர்திகள், சல்வார் அல்லது பேண்ட்டுகள், செருப்புகள் அல்லது குறைந்த உயரம் கொண்ட ஹீல்ஸ் செருப்புகளை அணிந்து வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
முழுக்கை ஆடைகள், எம்பிராய்டரி வடிவம் கொண்டவை, ஹேர்பின்கள், கிளிப்புகள், ஆடம்பரமான ஆபரணங்கள், நகைகள், அதிக உயரம் கொண்ட ஹீல்ஸ்கள், ஷூக்கள், மூடிய நிலையில் வடிவமைக்கப்பட்ட காலணிகளை அணிந்து வர கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு மையத்திற்குத் தேர்வுக் கூட அனுமதிச் சீட்டு நகல், வருகை பதிவேட்டில் ஒட்டுவதற்கு ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம், அடையாள அட்டை, பால்பாயிண்ட் பேனா எடுத்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மொபைல் போன்கள், ஸ்மார்ட் வாட்சுகள், கால்குலேட்டர்கள், ப்ளூடூத் சாதனங்கள், பணப்பைகள், கைப்பைகள், சன் கிளாஸ்கள், அச்சிடப்பட்ட அல்லது கையால் எழுதப்பட்ட குறிப்புகள், துண்டு சீட்டுகள், சாப்பிடக்கூடிய பொருட்களை எடுத்துவரக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
தேர்வர்கள் சரிபார்ப்பு, சோதனை நடைமுறைகளை முடிக்க ஏதுவாக முற்பகல் 11 மணிக்குள் தேர்வு மையத்தை அடைய வேண்டும் என்றும், மதியம் 1.30 மணிக்குப் பின்னர் தேர்வு மையம் உள்ளே அனுமதி இல்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.