நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நடைபெறும் காய்கறி கண்காட்சியை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் மே மாதங்களில் கோடை சீசன் நிலவுவது வழக்கம். இச்சமயங்களில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.
இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை கவர ஆண்டுதோறும் தோட்டக்கலை துறை சார்பில் பல்வேறு கோடை விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டு கோத்தகிரியில் கோடை விழாவின் முதல் கண்காட்சியாக காய்கறி கண்காட்சி நேற்று தொடங்கியது.
இந்நிலையில் இறுதி நாளான இன்று காய்கறி கண்காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். தொடர்ந்து அவர்கள் அங்கு காய்கறிகளால் அமைக்கப்பட்டுள்ள பறவைகள் மற்றும் விலங்குகளின் தத்ரூப உருவங்களை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
நுழைவாயில் பகுதியில் மயில் உருவம் முருங்கைக்காய் தோகைகளோடு இடம்பெற்றிருந்தன.பூங்காவினுள் பச்சை மிளகாய் கோவக்காய்களை கொண்டு தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான சிலம்பத்தை ஆண், பெண் இருவரும் விளையாடுவது போல் வடிவங்கள் அமைக்கப்பட்டிருந்தது.