ஈரோடு அருகே தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதியினர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம், சிவகிரி அடுத்த வெளாங்காட்டு வலசு பகுதியில் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதி ராமசாமி – பாக்கியம்மாள் ஆகியோர் இரு தினங்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். மேலும், 15 சவரன் நகைக்காக வயதான தம்பதி கொலை செய்யப்பட்டதாகவும், குற்றவாளிகளை கண்டுபிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வயதான தம்பதியினர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து மோளபாளையம் நான்கு சாலை பகுதியில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.
அப்போது பேசிய விவசாயிகள், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நகை, பணத்திற்காக தொடர் கொலை சம்பவங்கள் நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டினர். மேலும், வயதான தம்பதி கொலை வழக்கில் இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை எனக்கூறிய விவசாயிகள், தமிழக அரசு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.