சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த திடீர் மழையால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
சென்னையில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்த நிலையில், திடீரென கனமழை பெய்தது. குறிப்பாக, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், வடபழனி, தி.நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. கத்திரி வெயில் தொடங்கிய முதல் நாளிலேயே, திடீரென மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதனிடைேய பலத்த காற்று காரணமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் விமானங்கள் வானில் வட்டமடித்தன. மேலும், சென்னையில் இருந்து இலங்கை, டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளுக்கு புறப்பட வேண்டிய 7 விமானங்கள் தாமதமானதால் பயணிகள் அவதி அடைந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. பகலில் வெப்பம் வாட்டி வதைத்த நிலையில், மாலையில் திடீரென மழை பெய்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.