கரூரில் அருகே கோவில் திருவிழாவின்போது நடனமாடுவதில் ஏற்பட்ட தகராறில் 17 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள கொல்லம் பட்டறை தெருவைச் சேர்ந்த ஷியாம் சுந்தர் +2 பொதுத்தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருந்தார். இந்நிலையில்,
மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி, நடந்த ஊர்வலத்தில் ஷியாம் சுந்தர் நடனமாடியுள்ளார்.
அப்போது மற்றொருபுறம் நடனமாடியபடி வந்த பெரிய பாலத்தைச் சேர்ந்த நாகேந்திரன் உள்ளிட்டோர், ஷியாம் சுந்தர் மீது இடித்து மேலே விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களை ஓரமாக சென்று நடனமாடும்படி ஷியாம் சுந்தர் கூறிய நிலையில், அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த நாகேந்திரன் உள்ளிட்டோர் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஷியாம் சுந்தரை சரமாரியாக குத்திவிட்டு தப்பிச் சென்றனர். அவரை தடுக்க முயன்ற அதே பகுதியைச் சேர்ந்த அஜய், வசந்தகுமார் ஆகியோருக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதில் படுகாயமடைந்த ஷியாம் சுந்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்.பி ஃபெரோஸ் கான் அப்துல்லா ஆய்வு மேற்கொண்ட நிலையில், போலீசார் இரு தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.