கொடைக்கானலில் சாகச சுற்றுலா என்ற பெயரில் பயணிகளை ஆபத்து நிறைந்த பகுதிகளுக்கு அழைத்துச் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கொடைக்கானலில் அழகும் ஆபத்தும் நிறைந்த சில பகுதிகளுக்குச் சாகச சுற்றுலா என்ற பெயரில் மக்களைச் சிலர் அழைத்துச் சென்று வருகின்றனர். குறிப்பாக பள்ளங்கி அருகே உள்ள கோம்பை பகுதி பெப்பர் அருவிக்கு ஆபத்தான முறையில் சுற்றுலாப் பயணிகள் அழைத்துச் செல்லப்படுவது அதிகரித்து வருகிறது.
இந்த பெப்பர் அருவியைக் காண 2 ஆறுகளை கடந்து செல்ல வேண்டும் என்பதால், காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டால் சுற்றுலாப் பயணிகள் சிக்கிக்கொள்ளும் அபாயம் உள்ளது.
இந்நிலையில், அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், பெப்பர் அருவிக்கு ஆபத்தான முறையில் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவதைத் தவிர்க்க வேண்டும் எனவும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.