உளுந்தூர்பேட்டை சாலை விபத்து தொடர்பாக காவல்துறை உண்மைக்குப் புறம்பாக விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளதாக மதுரை ஆதீனம் குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கார் விபத்து தொடர்பாக எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை என்று காவல்துறை கூறுவது ஏற்புடையதல்ல எனத் தெரிவித்துள்ளார்.
விபத்து நடந்த அடுத்த நிமிடமே 100 எண்ணைத் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்ததாகவும், உளுந்தூர்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளரிடம் விபத்து தொடர்பாகப் பேசியதாகவும் கூறியுள்ளார்.
சம்பவம் நடந்து 26 மணி நேரம் கழித்து எந்தவித தகவலையும் தெரிவிக்கவில்லை என்ற காவல்துறையின் அறிக்கை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது எனக்கூறியுள்ள மதுரை ஆதீனம், எதிர் தரப்பின் புகாரின் அடிப்படையில் தனது கார் ஓட்டுநர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எதிர் தரப்பு வாகனம் பக்கவாட்டில் வேகமாக வந்து மோதியதை மறைக்கும் வகையில், தாங்கள்தான் விபத்து ஏற்படுத்தி விட்டதாகக் கூறுவது ஏற்புடையதல்ல எனக்கூறியுள்ள அவர், முன்னுக்குப் பின் முரணாக அமைந்துள்ள காவல்துறையின் விளக்க அறிக்கை ஒரு சார்புடையதாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.