கொங்கு மண்டலத்தில் தோட்டத்து வீடுகளில் தனியே வசிப்பவர்களைக் குறி வைத்து நகை, பணத்துக்காகக் கொலை செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இப்படிக் கொள்ளையடித்து கொலை செய்வோரின் பின்னணியோ பலரையும் அதிர வைத்துள்ளது.
குற்றவாளிகளைப் பிடிக்க காவல்துறையினர் விதவிதமான தொழில்நுட்பங்களைக் கையாண்டு வருகின்றனர். ஆனால் அப்படியும் சில குற்றவாளிகள் சிக்காமல் ஆண்டுக் கணக்கில் காவல்துறையினருடன் கண்ணாமூச்சி விளையாடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் அறச்சலூர் பகுதியில் கடந்த 2020ஆம் ஆண்டு வீட்டின் பூட்டை உடைத்து 13 சவரன் தங்க நகைகள், 40 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டன. அதே ஆண்டு அறச்சலூர் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 70 வயது மூதாட்டி சாமியாத்தாள் என்பவர் நகைகளுக்காகக் கொலை செய்யப்பட்டார்.
2021 ஆம் ஆண்டு திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் இரண்டு வீடுகளில் 3 பேரை அடித்து கொலை செய்து விட்டு அவர்களிடம் இருந்து 18 சவரன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர். இப்படியாக நகை,பணத்துக்காகக் கொலை செய்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருந்தன.
கடந்த 2022- ஆம் ஆண்டு சென்னிமலை உப்பிலிபாளையம் குட்டக்காட்டு புதூர் பகுதியைச் சேர்ந்த விவசாய தம்பதியினர் துரைசாமி – ஜெயமணி ஆகியோர் தோட்டத்து வீட்டின் வெளியே கயிற்றுக் கட்டிலில் தூங்கி கொண்டிருந்தனர்.
நள்ளிரவில் புகுந்த கொள்ளையர்கள் துரைசாமியை இரும்பு ராடால் கொடூரமாக அடித்துக் கொலை செய்தனர். அவரது மனைவி ஜெயமணியை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றபோது சுய நினைவை இழந்ததோடு சிகிச்சைக்குப் பிறகு பிழைத்துக் கொண்டார். இந்த கொடூர சம்பவத்தில் வீட்டில் இருந்த 27- சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டன.
இப்படியாக நீண்டு கொண்டிருந்த பட்டியலில் கடந்த 2023- ம் ஆண்டு மீண்டும் அதிர்ச்சி அரங்கேறியது. சென்னிமலை அருகே கரியங்காட்டு தோட்டத்தைச் சேர்ந்தவர்கள் வயதான விவசாய தம்பதியான முத்துசாமி – சாமியாத்தாள். இவர்கள் இரவில் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தபோது உள்ளே புகுந்த கொள்ளை கும்பல் கொடூரமான முறையில் இருவரையுமே கொலை செய்து விட்டு 15 சவரன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றது.
இப்படி நகை, பணத்துக்காக நடைபெறும் கொலை சம்பவங்களில் குற்றவாளிகளைப் பிடிப்பது என்பது காவல்துறையினருக்கு பெரும் சிம்ம சொப்பனமாகவே இருந்து வந்தது. இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட விவரங்களை ஒரு கட்டத்தில் காவல்துறை கண்டுபிடித்தது.
இதன் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவை சேர்ந்த எருமாடு பகுதியை சேர்ந்த சின்னாஜ், கருப்பசாமி, வீரமணி, கண்ணன், நாகராஜ் ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து கேரளாவின் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த கொரில்லா முருகன், கேசவன் , காளிமுத்து, தஞ்சாவூர் மாவட்டம் மானேஜ்பட்டியை சேர்ந்த இளையராஜா, சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த சைக்கோ சங்கர், திருப்பூரைச் சேர்ந்த சொக்கநாதன் ஆகியோரையும் கைது செய்தனர். இவர்கள் மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது.
இப்படி கைது செய்யப்பட்டவர்கள் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த ஆண்டு திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் 3 பேர் நகை, பணத்துக்காகக் கொலை செய்யப்பட்டனர். தற்போது சிவகிரியில் வயதான தம்பதியான ராமசாமி – பாக்கியம் ஆகியோரும் நகை பணத்திற்காக இதே பாணியில் கொலை செய்யப்பட காவல்துறையே அதிர்ச்சியடைந்துள்ளது. சிறையில் இருக்கும் போது வெளியே எப்படி கொலை நடந்தது? என்ற கேள்விக்குக் கொள்ளையடிக்கும் கும்பல் மிகவும் திட்டமிட்டு சம்பவத்தை அரங்கேற்றுவது தெரிய வந்தது.
கொலை, கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றுவதற்கு ஒரு சில மாதங்களுக்கு முன்பே கிராமத்தில் உள்ள வீடுகளை நோட்டமிட தமது ஆட்களை அனுப்பி வைக்கிறார்கள். அம்மி கல் கொத்துவது, ஆட்டுக்கல் விற்பனை செய்வது, கீரி பாம்பு பிடிப்பது என்ற போர்வையில் செல்லும் அவர்கள் வீடுகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை, சிசிடிவி கேமராக்கள், ஆட்கள் நடமாட்டம் ஆகியவற்றைக் கண்காணித்து கொலைக் கும்பலுக்குத் தகவல் கொடுக்கின்றனர். இதன்பிறகே அவர்களும் பயங்கரத்தை நடத்தி முடிக்கின்றனர்.
இருள் சூழ்ந்த அமாவாசைக்குப் பிறகு ஒன்று அல்லது நான்கு நாட்களுக்குள் நள்ளிரவில் தமது ஆட்கள் துப்பு கொடுத்த கிராமத்து வீடு, தோட்டத்து வீடுகளை குறி வைத்து கொள்ளை கும்பல் செல்கிறது.
இரும்பு ராடு மற்றும் கூர்மையான கத்தியைக் கொண்டு கொலை செய்து விட்டு நகை, பணத்தைக் கொள்ளையடித்து விட்டுத் தப்பிச் செல்கிறது. இப்படி கொலை, கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றும் கும்பல் செல்போன் எடுத்துச் செல்வதில்லை. ஏற்கனவே துப்பு துலங்கியபடி சிசிடிவி இருக்கும் பகுதியில் செல்வது இல்லை…. வாகனம், கைரேகை என எந்த விதமான தடயங்களும் சிக்காத வகையில் கொலை, கொள்ளை சம்பவத்தை நடத்தி முடித்துவிட்டு டெக்னிக்கலாக தப்பிச் சென்று விடுகின்றனர்.
இவர்களில் ஒரு குழுவினர் சிறையிலிருந்தால் மற்றொரு குழுவினர் வெளியே சுற்றியபடி கொலை,கொள்ளைகளை நிகழ்த்துகின்றனர். ஒரு கட்டத்தில் இந்தக் கும்பல் சிறைக்குச் சென்றாலும் மற்றொரு கும்பல் கொலை, கொள்ளைகளை நடத்தி முடிக்கிறது என்பதுதான் அதிர வைக்கும் தகவல். அதாவது பெரிய அளவிலான கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் முன் சிறிய திருட்டில் ஈடுபடுவது இந்தக் கும்பலின் வழக்கும்.
அதன் பிறகு பெரிய அளவிலான கொலை, கொள்ளை சம்பவத்தைச் செய்து முடித்து சிறிய திருட்டு வழக்கில் தாமாகவே காவல்துறையிடம் சிக்கி சிறைக்குச் செல்கின்றனர். சில நாட்களிலேயே வெளியில் வந்து மீண்டும் பழைய பாணியிலேயே பயங்கரத்தை நிகழ்த்துகின்றனர். இப்படியாக ஒரு கும்பல் உள்ளே இருக்க மற்றொரு கும்பல் வெளியே இருந்து சம்பவம் செய்ய, சினிமா காட்சிகளையே மிஞ்சும் அளவிற்கு க்ரைம் திரில்லரால் கொங்கு மண்டலம் கதிகலங்கி உள்ளது.
தற்போது இதே பாணியில்தான் சிவகிரியில் அமாவாசை தினத்திற்கு அடுத்த நாள் ராமசாமி – பாக்கியம் தம்பதி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் சிலரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்திருக்கின்றனர் காவல் துறையினர்.
எது எப்படியென்றாலும் இருள் சூழ்ந்த அமாவாசை தினம் நெருங்கினாலே கொங்கு மண்டல மக்கள் குலை நடுங்கிப் போகிறார்கள். குறிப்பாக ஈரோடு மாவட்டம் சென்னிமலை, அறச்சலூர், சிவகிரி, திருப்பூர் மாவட்டம் காங்கேயம், பல்லடம் பகுதி மக்கள் ஒவ்வொரு இரவையும் அச்சத்துடன் கடக்கின்றனர். இதற்கு தமிழக காவல்துறை எப்போது முடிவு கட்டப்போகிறது என்பதே அவர்களின் கேள்வியாக ஒலிக்கிறது.