நாடு முழுவதும் சாலை விபத்துகளில் காயம் அடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளால் சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2018 முதல் 2022 வரை சாலை விபத்துகளில் 7 லட்சத்து 77 ஆயிரத்து 423 பேர் உயிரிழந்ததாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பணமில்லா சிகிச்சை வழங்கும் திட்டம் தொடங்கப்படும் எனக் கடந்த ஜனவரி மாதம் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருந்தார்.
அதன்படி, சாலை விபத்துகளில் காயம் அடைந்தவர்கள், விபத்து நிகழ்ந்த முதல் 7 நாட்களுக்குள் தனியார் மருத்துவமனைகளில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை இலவசமாகச் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2030 ஆம் ஆண்டுக்குள் சாலை விபத்துகளில் உயிரிழப்போர் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைக்க இலக்கு நிர்ணயித்துள்ள மத்திய அரசு, இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதைக் கண்காணிக்க 17 பேர் கொண்ட உயர்மட்ட குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது.