உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தஞ்சை பெரிய கோயிலில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து நாள்தோறும் தியாகராஜர் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தார். இந்நிலையில், சித்திரைத் திருவிழாவின் 15ஆம் நாள் நிகழ்ச்சியில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட தேரில் தியாகராஜர் சுவாமியும், அம்பாளும் எழுந்தருளிய நிலையில், பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேருக்கு முன்னால் சுப்ரமணியர் வீதியுலா செல்ல, பின்னால் நீலோத்பாலாம்பாள் மற்றும் சண்டிகேசுவரர் ஊர்வலமாகச் சென்றனர்.
இந்த நிகழ்வில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக, தியாகராஜர் சுவாமியையும், அம்பாளையும் தேரில் அமர வைக்கும்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் கால் தவறி விழுந்து படுகாயமடைந்தார்.
உடனடியாக, அவரை பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், தேரில் இருந்து கோயில் ஊழியர் தவறி விழுந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.