உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் அம்பாளும், சுவாமியும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த நிலையில், அம்மனின் பட்டாபிஷேகம் மற்றும் திக் விஜயமும் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. திருக்கல்யாணத்தை முன்னிட்டு சுவாமியும் அம்மனும் அதிகாலை சித்திரை வீதிகளில் வலம் வந்து திருக்கல்யாண மேடையை வந்தடைந்தனர். அலங்கரிப்பட்ட திருக்கல்யாண மேடையில் மணக்கோலத்தில் மீனாட்சியம்மனும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் தனித்தனியாக எழுந்தருளினர்.
தொடர்ந்து, பாலிகை இடும் நிகழ்ச்சி, காப்புக்கட்டும் வைபவமும் நடைபெற்றது. பின்னர், மீனாட்சியம்மனுக்கும், சுந்தரேஸ்வரருக்கும் மணப்பட்டு சாற்றும் நிகழ்வும், மீனாட்சியம்மனை பவளகனிவாய் பெருமாள் தாரைவார்த்து கொடுக்கும் வைபவமும் நடைபெற்றது.