மதுரை மீனாட்சியம்மன் கோயில் தேரோட்டம் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரைத் திருவிழா, கடந்த ஏப்ரல் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிலையில் திருத்தேரோட்டத்தை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட தேர்களில் மீனாட்சி – சுந்தரேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.
திருத்தேரோட்டத்தில் கலந்து கொள்ளப் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் நகரமே விழாக்கோலம் பூண்டது.
பக்தர்கள் கோவிந்தா, அரோகரா, சிவ சிவா கோஷங்களுடன் மாசி வீதிகளில் தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர். இந்நிகழ்வையொட்டி 2,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.