எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பாகிஸ்தான் நடத்திய டிரோன் தாக்குதலை இந்திய ராணுவம் திறம்பட முறியடித்துள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தி, பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பாடம் புகட்டியது. இதனால் சம்பா, ஜம்மு, அக்னூர், உதம்பூர், நம்ரோட்டா, பதான்கோட் உள்ளிட்ட மேற்கு எல்லைப்பகுதிகளில், நேற்றிரவு பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது.
இதனை இந்திய ராணுவத்தின் S-400 வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக இடைமறித்து அழித்தன. இதனால் இந்தியாவில் பேரழிவை ஏற்படுத்தும் பாகிஸ்தானின் திட்டம் தவிடுபொடியானது.
இந்நிலையில் பாகிஸ்தானின் டிரோன்கள் வெற்றிகரமாக அழிக்கப்பட்ட காணொளியை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. அதில், வான்வழி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வலுவான நிலையில் தயாராக உள்ளோம் எனவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் தாக்குதலை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்து வரும் நிலையில், எந்தவித விளைவுகளையும் எதிர்கொள்ள இந்தியா தயாராகியுள்ளது. இதன் காரணமாகத் தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதுகாப்பு கருதி சண்டிகர், ஸ்ரீநகர், அமிர்தசரஸ், லூர்தியானா, ஜெய்சல்மர், கிஷன்கர், பாட்டியாலா, சிம்லா உள்ளிட்ட விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. இதனிடையே நாட்டின் இறையாண்மையையும், பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.