டெல்லியில் முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனையில் ஈடுபட்டார்.
பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் தக்க பதிலடி கொடுத்த நிலையில், எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறித் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரமடைந்துள்ளதால், டெல்லியில் முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார். அப்போது எல்லையில் அத்துமீறும் பாகிஸ்தானுக்கு இந்தியா தரும் பதிலடி குறித்து ராஜ்நாத் சிங் கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத் தலைவரை, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்தார். அப்போது பாகிஸ்தானுக்கு எதிரான போருக்குத்தேவையான ஆயுதங்களின் இருப்பு மற்றும் தயாரிப்பு குறித்து ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.
இதேபோல், எல்லை பாதுகாப்புப் படை மற்றும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை இயக்குநர்களுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டார்.
எல்லை மாநிலங்களில் பாதுகாப்பைப் பலப்படுத்தவும், தொழில் நிறுவனங்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் அமித்ஷா இந்த கூட்டத்தில் அறிவுறுத்தினார். தேசியப் பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார்.