இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாளை பேரணி நடைபெறும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் எல்லைமீறிய தாக்குதல்களுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து பாடம் புகட்டி வருகிறது. இந்நிலையில் இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாளை சென்னையில் பேரணி நடத்தப்படும் என்று முதல் அமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அதன்படி நாளை மாலை 5 மணிக்குச் சென்னை காவல்துறை இயக்குனர் அலுவலகத்திலிருந்து தீவுத்திடல் அருகே உள்ள போர் நினைவுச்சின்னம் வரை பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதனிடையே பாகிஸ்தான் தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்து வரும், இந்திய ராணுவத்துக்கு ஆதரவாகக் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பேரணி நடைபெற்றது. இதில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில் ஸ்ரீநகரில் உள்ள தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப கல்வி நிறுவனம் மற்றும் வேளாண் பல்கலைக்கழகங்களில் பயின்று வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களை மீட்கத் தமிழக அரசு அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளது.
அங்குப் பயின்றுவரும் மாணவர்கள் தொடர்பு கொள்வதற்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நிலைமை சீரடைந்ததும், மாணவர்கள் அனைவரும் அழைத்து வரப்படுவார்கள் என்று அரசு விளக்கம் அளித்துள்ளது.