இந்திய எல்லைக்குள் இருந்தபடியே நமது ராணுவம் OPERATION SINDOOR-ஐ நிகழ்த்தியது எப்படி என்பது தொடர்பாக வரைகலை வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.
பஹல்காம் தாக்குதலுக்குக் கொடுக்கப்பட்ட பதிலடியில் ரபேல் விமானங்கள் முக்கியப் பங்கு வகித்திருக்கின்றன. OPERATION SINDOOR-ன் சிறப்பம்சமே பாகிஸ்தான் வான்வெளிக்குள் செல்லாமல் தாக்குதல் நடத்தப்பட்டதுதான். அது எப்படி என்பது பற்றி வரைகலை வீடியோ ஒன்று இணையத்தில் உலாவுகிறது.
அதில், இந்திய – பாகிஸ்தான் எல்லைக்கோட்டிலிருந்து 100 முதல் 200 கிலோ மீட்டர் தொலைவுக்குள் நின்று ரபேல் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக உயரத்தில் இந்திய எல்லைக்குள்ளேயே நின்ற ரபேல் விமானங்கள் SCALP ஏவுகணைகளை ஏவித் தாக்கியதாகக் கூறப்பட்டுள்ளது. SCALP ஏவுகணை நீண்ட தூரம் சென்று தாக்கும் திறன் கொண்டது. இரவு நேரத்தில் இருள் சூழ்ந்த இடங்களிலும் துல்லியமாகத் தாக்குதல் நடத்தும். ரேடாரில் சிக்காமல் கட்டடங்களையும் பதுங்கு குழிகளையும் முற்றிலுமாக அழிக்கும் திறன் கொண்டது.
அதேபோல் ஹரியானாவின் அம்பாலா நகரத்தில் உள்ள விமானப்படைத் தளத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற ரபேல் விமானங்கள் KOTLI, BHIMBER ஆகிய இடங்களில் HAMMER குண்டுகளை வீசியதாகக் கூறப்படுகிறது.
HAMMER குண்டுகள் விரைவாகச் சென்று இலக்கை தாக்கக்கூடியவை. JAMMER-களால் இவற்றைத் தடுக்க முடியாது. குறைந்த உயரத்திலிருந்தே வீசப்படுவதால் இடைமறிப்பதும் கடினம்.
இதேபோல் உத்தரப்பிரதேச மாநிலம் BAREILLY-ல் இருந்து புறப்பட்ட சுகோய் 30 MKI விமானங்கள் பிரமோஸ் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லைக்குள் 400 முதல் 500 கிலோமீட்டர் தொலைவுக்குச் சென்று பிரமோஸ் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிவேகமாகச் செல்வதால் பிராமோஸை தடுத்து நிறுத்த எதிரிகளுக்கு அதிக நேரம் இருக்காது.
ஏவுகணைகள் மட்டுமின்றி ட்ரோன்கள் மூலமும் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது. ரஜோரி மற்றும் பூஞ்ச்சில் இருந்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.