நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின் இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்க, ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா தாக்குதல் நடத்தியது. எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கும் இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது.
இதற்கிடையே இரு நாடுகளுக்கு இடையிலான போர் பதற்றத்தைக் குறைக்கவும், பேச்சுவார்த்தையின் வாயிலாக சுமூக தீர்வு காணவும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.
இந்நிலையில், போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், அமெரிக்கா நடத்திய நீண்ட நெடிய பேச்சுவார்த்தைக்குப் பின் இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் போர் நிறுத்த நடவடிக்கைக்கு ஒப்புக்கொண்டதாகவும், சிறந்த புத்திசாலித்தனத்துடன் செயல்பட்ட இரு நாடுகளுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, பாகிஸ்தான் துணைப் பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சருமான இஷாக் தாரும், இந்தியாவுடனான போர் நிறுத்த நடவடிக்கை அமலுக்கு வந்ததை உறுதி செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஒப்புக்கொண்டதாகவும், பாகிஸ்தான் எப்போதும் தனது இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டில் சமரசம் செய்யாமல், பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநாட்டப் பாடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.