இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவின் கடுமையான எதிர்ப்பையும் மீறி பாகிஸ்தானுக்கு 8,542 கோடி ரூபாய் கடன் வழங்குவதற்கு IMF ஒப்புதல் அளித்துள்ளது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
நெருக்கடியில் இருந்து நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கப் பாகிஸ்தான், சர்வதேச நிதி ஆணையத்தில் கடன் கேட்டிருந்தது. இது தொடர்பான சர்வதேச நிதி ஆணைய கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடந்தது.
IMF நிதியைப் பாகிஸ்தான் எப்போதுமே முறையாகப் பயன்படுத்தியதில்லை. மேலும், கடன்பெறும் நிதியைப் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதற்குப் பயன்படுத்தக் கூடும் என்று இந்தியா கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும் பாகிஸ்தானுக்குக் கடன் வழங்குவது தொடர்பாக நடைபெற்ற வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.
இந்நிலையில், பாகிஸ்தானுக்கு 8542 கோடி ரூபாய் கடன் வழங்க IMF ஒப்புதல் வழங்கி உள்ளது. பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் கடன் நிதி, ஜம்மு காஷ்மீரை அழிக்கும் பயங்கர வாதத்துக்குப் பயன்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா,சர்வதேச நிதி ஆணையத்தின் இந்த முடிவைக் கண்டித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியில் நாடு தத்தளிக்கும்போதே, எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில், பாகிஸ்தான் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. IMF-ன் கடன் ஒப்புதல் கையெழுத்தின் மை காய்வதற்குள், இந்தியாவுக்கு எதிராகப் பாகிஸ்தான் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.
மேலும், ரஜோரி, பூஞ்ச், உரி, டாங்தார், உட்பட ஜம்மு காஷ்மீரில் உள்ள பல பகுதிகளில் பாகிஸ்தான் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. அத்துமீறும் பாகிஸ்தானின் அனைத்து தாக்குதல்களையும் இந்தியா வெற்றிகரமாக முறியடித்துள்ளது.
1958-ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் சர்வதேச நிதி ஆணையத்திடம் கடன் வாங்கி வருகிறது. 1989 ஆம் ஆண்டில் இருந்து கிட்டத் தட்ட 35 ஆண்டுகளில் 28 ஆண்டுகள் IMF பாகிஸ்தானுக்குக் கடன் வழங்கியுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் பாகிஸ்தானின் 4 முக்கிய திட்டங்களுக்கு IMF கடன் வழங்கியுள்ளது. ஏற்கெனவே வாங்கிய நிதியில் குறிப்பிட்ட திட்டங்களை முறையாகச் செயல்படுத்தி இருந்தாலே, இன்னொரு முறை கடன் கேட்கும் நிலைக்குப் பாகிஸ்தான் வந்திருக்காது.
தொடர்ந்து கடன் பெற்றுவரும் பாகிஸ்தான், மீண்டும் மீண்டும் பொருளாதார சரிவைச் சந்தித்து, கடனைத் திரும்பிச் செலுத்த முடியாத நிலையில் உள்ளது. பாகிஸ்தானின் அரசில் இராணுவத்தின் தலையீடு அதிகமாக உள்ளது. நாட்டில் எந்த பொருளாதார செயல் திட்டங்கள் எதுவும் நடைமுறைக்கு வருவதில்லை. பாகிஸ்தானின் மொத்த பட்ஜெட்டில் ராணுவத்திற்கான செலவுகளே அதிகமாகும். இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டிலும் ராணுவத்துக்கான ஒதுக்கீட்டைப் பாகிஸ்தான் 18 சதவீதம் அதிகரித்துள்ளது.
தொடர்ந்து, உலகளாவிய பயங்கரவாதத்துக்கு ஆதரவாக இருக்கும் பாகிஸ்தானுக்கு இவ்வளவு பெரிய நிதி கிடைத்திருப்பது உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த நிதியை வைத்துக் கொண்டு, இந்தியாவுக்கு எதிரான போரைப் பாகிஸ்தான் தீவிரப் படுத்தும் வாய்ப்புள்ளதாக புவிசார் அரசியல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.