போர் நிறுத்தம் எதிரொலியாக எல்லைப் பகுதிகளில் இயல்புநிலை திரும்பியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
போர் நிறுத்தம் நேற்று மாலை 5 மணிக்கு அமலுக்கு வந்தது. போர் நிறுத்தம் அமலுக்கு வந்த சிலமணி நேரத்தில் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறித் தாக்குதல் நடத்தியது.
இதற்கு ராணுவம் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. நள்ளிரவுக்குப்பின் ட்ரோன் தாக்குதல்களோ, துப்பாக்கிச்சூடோ நடைபெறவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி, அக்னூர், பூஞ்ச் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் இயல்பு நிலை திரும்பியது.
இதேபோல் பஞ்சாப் மாநிலம் பதான்கோட், ஃபிரோஸ்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும் இயல்பு நிலை திரும்பியதால், அங்கும் வழக்கம் போல் வாகனங்கள் இயங்கத் தொடங்கின.
இருப்பினும் சிவப்பு எச்சரிக்கை தொடர்வதாகவும், எனவே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.