பாகிஸ்தானின் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்க இந்தியா எப்போதும் தயாராகவே உள்ளதாக, விங் கமாண்டர் வியோமிகா சிங் தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்தத்துக்குப் பிறகு இந்திய ராணுவத்தின் சார்பில், விங் கமாண்டர் வியோமிகா சிங், கர்னல் சோபியா குரேஷி உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய விங் கமாண்டர் வியோமிகா சிங், இந்தியாவின் பதிலடி நடவடிக்கையால் பாகிஸ்தான் ராணுவத்திற்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது எனவும், பதான்கோட், ஸ்ரீநகர் விமான தளங்கள் தாக்கப்பட்டதாகப் பாகிஸ்தான் தெரிவித்தது பொய்யான தகவல் என்றும் தெரிவித்தார்.
மசூதிகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதாகப் பாகிஸ்தான் பொய்யான பரப்புரை செய்ததாக கூறிய அவர், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை மட்டுமே இந்தியா தாக்கியதாகவும், வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை எனவும் விளக்கமளித்தார்.
இந்தியாவின் இறையாண்மை மற்றும் எல்லைகளைப் பாதுகாக்க முப்படைகளும் எந்த எல்லைக்கும் செல்லும் எனக்கூறிய வியோமிகா சிங், இந்தியாவின் எஸ்-400 உள்ளிட்ட வான் பாதுகாப்பு அமைப்புகள் தாக்கப்பட்டதாகப் பாகிஸ்தான் பொய் பரப்புரை செய்ததாகவும் கூறினார். மேலும், இந்தியாவின் அதிரடி ராணுவ தாக்குதலால் பாகிஸ்தான் ராணுவத்தின் ஒருங்கிணைப்பு, மன உறுதி சீர்குலைந்ததாகவும் வியோமிகா சிங் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய கர்னல் சோபியா குரேஷி, பிரம்மோஸ் ஏவுகணையைத் தாக்கி அழித்ததாகப் பாகிஸ்தான் பொய்ப் பரப்புரை செய்ததாகவும், இந்தியாவின் எல்லைகளைப் பாதுகாக்க ராணுவம் இப்போதும் தயாராகவே உள்ளதாகவும் கூறினார்.
முன்னதாக பேசிய கமாண்டர் ரகு ஆர் நாயர், தாய்நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க முழுமையாகத் தயாராகவும், விழிப்புடனும், உறுதியுடனும் இருப்பதாகத் தெரிவித்தார். பாகிஸ்தானின் ஒவ்வொரு தவறான சாகசமும், பலத்துடன் எதிர்கொள்ளப்பட்டதாகவும் கமாண்டர் ரகு ஆர் நாயர் தெரிவித்தார்.