நீலகிரி மாவட்டத்தில் நடக்கும் கோடை விழாவின் ஒரு பகுதியாக உதகையில் நாய்கள் கண்காட்சி துவங்கியது. இதில் 55 ரகங்களை சேர்ந்த 450 நாய்கள் பங்கேற்று, திறமையை வெளிப்படுத்தின.
மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் தொடங்கும். இந்தக் கால கட்டத்தில் உள்நாடு மட்டுமின்றி, வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவர். அவர்களைக் கவரும் விதமாக ஆண்டுதோறும் தோட்டக் கலைத்துறை, சுற்றுலாத் துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் மலர் கண்காட்சி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான கோடை விழாவையொட்டி, உதகை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நாய் கண்காட்சி துவங்கியது. தென்னிந்திய கென்னல் கிளப் சார்பில், நடத்தப்படும் கண்காட்சியில் 55 ரகங்களில் 450-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்கின்றன.
வரும் 11ஆம் தேதி வரை நடைபெறும் இந்த நாய்கள் கண்காட்சியில், ஜப்பான் மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளைச் சேர்ந்த நடுவர்கள், நாய்களின் கீழ்படிதல் திறன் மற்றும் வேகத்திறன் ஆகியவற்றை மதிப்பிடுவார். அரிய வகை நாய்களைப் பற்றி அறிந்து கொள்ள இந்த கண்காட்சி உதவுவதாகச் சுற்றுலாப் பயணிகள் தெரிவித்துள்ளனர்.
கண்காட்சியின் இறுதி நாளில், போட்டியில் பங்கேற்ற நாய்களில் ஒன்றிற்கு ‘ஆண்டின் சிறந்த நாய்’ விருது வழங்கப்படும். உதகை நாய்கள் கண்காட்சியை முன்னிட்டு, நாய்களுக்குத் தேவையான உணவு, பெல்ட், சங்கிலி உள்ளிட்ட உபகரணங்கள் கொண்ட அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.