மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இன்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
மதுரை மாவட்டம் கள்ளழகர் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 8-ஆம் தேதி விமரிசையாக தொடங்கியது. நாள்தோறும் கள்ளழகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில், மண்டுக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக மதுரை மாநகருக்கு கண்டாங்கி பட்டுடுத்தி தங்க பல்லக்கில் கள்ளழகர் வந்தடைந்தார். எதிர்சேவையின்போது தல்லாகுளம் அவுட் போஸ்ட் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் அம்பலக்காரர் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு கள்ளழகர் அருள்பாலித்தார்.
இந்நிலையில், அதிகாலை 2.30 மணி அளவில் தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலுக்கு வந்து, தங்கக்குதிரையில் அமர்ந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் கள்ளழகர் எழுந்தருளினார். அதன்பின் 3 மணி அளவில் தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றுக்கு புறப்பட்டு சென்றார்.
காலை 5.45 மணி முதல் 6.05 மணிக்குள் தங்கக்குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். வண்டியூர் வீரராகவப்பெருமாள் முன்கூட்டியே அங்கு வந்திருந்து கள்ளழகரை வரவேற்றார்.