ஒருநாள் மட்டும் அன்னையர்களைப் போற்றினால் போதாது என்றும், அன்னையர்கள் தினமும் போற்றப்பட வேண்டியவர்கள் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சர்வதேச அன்னையர் தினத்தை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்புக் குழந்தைகளுக்கும், அவர்களின் அன்னையர்களுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
பின்னர் பேசிய அவர், சிறப்புக் குழந்தைகளுக்குப் பொறாமை, சுயநலம் இல்லை என்றும், மாற்றுத்திறனாளி குழந்தைகளை அன்றாடம் கவனிக்கும் அன்னையர்கள் அனைவரும் போராளிகள் என்றும் தெரிவித்தார்.
தனது அன்னையின் வளர்ப்பு தான் தனக்கு ஊக்கம், சக்தியைக் கொடுத்ததாகவும், அன்னையர்கள் அனைவரும் சிறப்பானவர்கள் என்றும் அவர் கூறினார்.
சிறப்புக் குழந்தைகளும் இந்த நாட்டுப் பிரஜைகள் தான் என்று குறிப்பிட்ட ஆளுநர் ரவி, தேசிய அளவில் சிறப்பு மாற்றுத்திறனாளி குழந்தைகளைப் பாதுகாக்கப் பிரதமர் மோடி சிறப்புத் திட்டங்களை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்தார்.